நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்கிற தகவல் வெளியாகியது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். சில மையங்களில் பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள்.
இதனிடையே நேற்று நாமக்கல் நகராட்சியில் 4 இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி 3, 4, 9 மற்றும் 10-வது வார்டு பொதுமக்களுக்கு ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 11, 13, 14 மற்றும் 20-வது வார்டு பொதுமக்களுக்கு பிரதான சாலை தொடக்கப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்பட்டது.
20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
இதேபோல் 21, 22, 24, 25, 31 மற்றும் 34-வது வார்டு பொதுமக்களுக்கு துறையூர் சாலை பாவலர் முத்துசாமி நகராட்சி மண்டபத்திலும், 38 மற்றும் 39-வது வார்டு மக்களுக்கு கொண்டிசெட்டிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். மொத்தமாக 4 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் சுமார் 1,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாகவும், மாவட்டத்தில் இதுவரை சுமார் 7½ லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story