கோடியக்கரை சரணாலயத்திற்கு வரத்தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி உள்ளன.
வேதாரண்யம்:
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி உள்ளன.
கோடியக்கரை சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்துள்ளன. மேலும் ரஷியா நாட்டில் இருந்து கூழைகிடா, இலங்கையில் இருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், அண்டார்டிக்காவில் இருந்து கடல் காகம் என 18 வகையான பறவைகள் தற்போது வந்துள்ளன.
வடகிழக்கு பருவ மழை
ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஆலா பறவைகள், கோடியக்கரை சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் முதன் முதலாக வந்து சேரும். இந்த பறவைகள் வந்து மூன்று முதல் நான்கு வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதன் பிறகு இந்த சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கிச் செல்லும்.
சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பறவைகளை காணலாம்.
5 லட்சம் பறவைகள் வரும்
கடந்த ஆண்டு 1½ லட்சம் வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றது. இந்த ஆண்டு பருவநிலை நன்றாக உள்ளதால் சுமார் 5 லட்சம் பறவைகள் வந்து தங்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறினார்.
Related Tags :
Next Story