தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் தேசிய ஆணையக்குழுவின் தலைவர் வலியுறுத்தல்
நாடு முழுவதும் தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழுவின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர் நலச்சங்க பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அறக்கட்டளை பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதன் பின்னர் தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழுவின் தலைவர் வெங்கடேசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்
தூய்மை பணியாளர்களை பொறுத்தவரை தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இந்த பிரச்சினை தமிழகம் முழுவதிலும் இருக்கிறது. தூய்மை பணியில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறேன்.
ஏனெனில் தற்காலிக பணியாளர்களுக்கு சரியான முறையில் பணப்பலன்கள் கிடைப்பதில்லை, இன்சூரன்ஸ் அட்டை இல்லை, இ.எஸ்.ஐ. இல்லை. பெண்களாக இருந்தால் பாலியல் ரீதியான பிரச்சினை ஏற்படுகிறது. நிரந்தர பணியாளர்களுக்கு அந்த பிரச்சினைகள் கிடையாது. தற்காலிக பணியாளர்களை அவர்களை ஒப்பந்ததாரர்கள், மனிதர்களாகவே மதிப்பதில்லை.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு
தூய்மை பணியில் ஈடுபடுகின்ற ஒப்பந்த தொழிலாளர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய்வதற்காகவும், அவர்களின் சிரமத்தை கண்டறியவும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை என்பது இந்தியா முழுவதும் இருக்கிறது. எனவே தான் நாடு முழுவதும் தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
இங்கு தூய்மை பணியாளர்களுக்கென்று நலவாரியம் இருக்கிறது. நாங்கள் கேட்பது நலவாரியம் அல்ல, தூய்மை பணியாளர் ஆணையத்தை கேட்கிறோம். நலவாரியத்திற்கும், ஆணையத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நலவாரியம் என்பது சம்பந்தப்பட்ட அமைச்சர் தலைமையில் இயங்கும். ஆணையத்தை பொறுத்தவரை மற்றவர்கள் யாரும் அதில் தலையிட முடியாது. எனவே மாநில அளவில் தூய்மை பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும். இதற்காக கவர்னர், முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
நிதி உதவி
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கழிவுநீர் தொட்டிக்குள் அதிக மரணங்கள் நடந்துள்ளது. எந்தெந்த மாநிலங்களில் கழிவுநீர் தொட்டிக்குள் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்ற விவரம் கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல் கொரோனா நோயால் தூய்மை பணியாளர்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் இறந்துள்ளனர், அவ்வாறு இறந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்திற்கு என்னென்ன நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தையும் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறோம். டெல்லியில் கொரோனாவால் இறந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1 கோடியும், இமாசல பிரதேசத்தில் ரூ.50 லட்சமும் அறிவித்தார்கள், கர்நாடகாவில் ரூ.30 லட்சம் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ரூ.25 லட்சம் அறிவித்தார்கள். ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு முதலில் அறிவிக்கவில்லை, அதன் பிறகு அறிவித்துள்ளனர். அதை விட அதிகமாக தர வேண்டும் என்று அந்த கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story