கூடலூர் நகராட்சி, 9 பேரூராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி


கூடலூர் நகராட்சி, 9 பேரூராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி
x
தினத்தந்தி 26 Aug 2021 10:25 PM IST (Updated: 26 Aug 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சி, 9 பேரூராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி

ஊட்டி

நீலகிரியில் கூடலூர் நகராட்சி, 9 பேரூராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி காந்தலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பொதுமக்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

4,200 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட உள்ளது. தொற்று பரவலை தடுக்க 4,200 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. 

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பஸ் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று உறுதி செய்யப்படும்.

100 சதவீதம்

நீலகிரி மாவட்டத்தில 9 பேரூராட்சிகள், கூடலூர் நகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது. கோத்தகிரி, குன்னூர் ஆகிய 2 வட்டாரங்களில் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி 100 சதவீதத்தை நெருங்கி வருகிறது. மாவட்ட அளவில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த இலக்கை நோக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

 தொற்று பரவலை கட்டுப்படுத்த பணிபுரியும் இடங்களில் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சான்றிதழ்களை சரிபார்த்து கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை வேலைக்கு எடுக்க கூடாது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வர தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story