மச்சிக்கொல்லி-பேபி நகர் சாலை சீரமைக்கப்படுமா?


மச்சிக்கொல்லி-பேபி நகர் சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 26 Aug 2021 10:26 PM IST (Updated: 26 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

மச்சிக்கொல்லி-பேபி நகர் சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடலூர்

மச்சிக்கொல்லி-பேபி நகர் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பொதுமக்கள் அவதி

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி, மட்டம், பேபி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மச்சிக்கொல்லியில் இருந்து பேபி நகருக்கு சுமார் 2 கி.மீட்டர் தூரம் சாலை செல்கிறது. 

ஆனால் சாலையின் இடைப்பட்ட தூரத்தில் சுமார் 500 மீட்டர் தூரம் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் வாகனங்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை.

 இதன் காரணமாக நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சாலை அமைத்து தரவேண்டும்

இதேபோல் மச்சிக்கொல்லியில் இருந்து பேபி நகர் வழியாக செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்திற்கு சாலை செல்கிறது. இதனால் ஆதிவாசி மக்களின் அத்தியாவசிய தேவைக்காக தங்களது வீடுகளிலிருந்து தேவர்சோலை வந்து செல்கின்றனர். 

ஆனால் 500 மீட்டர் தூரம் சாலை வசதியில்லாமல் சேறும் சகதியுமாக இருப்பதால் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.

இதனால் சாலை அமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

புதுப்பிக்க நடவடிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மச்சிக்கொல்லியில் இருந்து பேபி நகருக்கு செல்லும் பாதையில் 500 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் அரசியல் கட்சியினர் வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 இதுதொடர்பாக தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் கூறுகையில், மச்சிக்கொல்லி-பேபிநகர் சாலையை புதுப்பிக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவித்தார். 

Next Story