ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழங்களை வியாபாரிகள் எடுத்து செல்ல அனுமதி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழங்களை வியாபாரிகள் எடுத்து செல்ல அனுமதி
ஊட்டி
ஊட்டி நகராட்சி மார்க்கெட் 2-வது நாளாக மூடப்பட்டது. காய்கறிகள், பழங்களை வியாபாரிகள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
கடைகளுக்கு ‘சீல்’
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1,587 கடைகள் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டது. அதன்படி வாடகை செலுத்தாத 1,395 கடைகளுக்கு ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 736 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. வாடகை செலுத்திய கடைகளும் திறக்க அனுமதி இல்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
நேற்று முன்தினம் சீல் வைக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று மார்க்கெட்டில் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அங்கு வந்த வியாபாரிகள் மார்க்கெட்டில் உள்ள காய்கறிகள், பழங்கள் சாக்குப் பைகள் மற்றும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளதால் அழுகும் அபாயம் உள்ளது. எனவே, அதனை வெளியே எடுத்து வர அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வியாபாரிகள் உள்ளே சென்றனர்.
காய்கறிகளை எடுக்க அனுமதி
விவசாயிகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த காய்கறி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மண்டி உரிமையாளர்கள் சரக்கு வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி மார்க்கெட்டில் இருந்து வெளியே கொண்டு சென்றனர்.
அதேபோல் காய்கறி, பழக்கடைகளில் இருந்தவற்றை வியாபாரிகள் திரும்பி எடுத்து சென்றார்கள். சீல் நடவடிக்கையை தொடர்ந்து வியாபாரிகள் நிலுவை வாடகை தொகையை செலுத்த தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை வியாபாரிகள் ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால் கடைகள் மறு ஏலம் விடப்படும். மேலும் பல கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story