வெறிச்சோடிய குன்னூர் சிம்ஸ் பூங்கா


வெறிச்சோடிய குன்னூர் சிம்ஸ் பூங்கா
x
தினத்தந்தி 26 Aug 2021 10:26 PM IST (Updated: 26 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

குன்னூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

குன்னூர்

குன்னூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

சிமஸ் பூங்கா

நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இந்த பூங்கா குன்னூர்-கோத்தகிரி சாலையில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் அழகிய மலர்கள் மட்டுமின்றி ருத்ராட்சை மரம், காகித மரம், யானை கால்மரம் போன்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.

இங்கு கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் பழக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்காட்சியை கண்டு ரசித்து செல்வார்கள்.

மலர் நாற்றுகள் நடும் பணி

கொரோனா பரவல் காரணமாக குன்னுர் சிம்ஸ் பூங்கா மூடப்பட்டது. இதனால் கடந்த மே மாதம் இறுதியில் நடைபெற வேண்டிய பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதனால் கடந்த 23-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டன. குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவும், படகு இல்லம் திறக்கப்பட்டது. 

இதற்கிடையில், வருகிற 2-வது சீசனையொட்டி சிம்ஸ் பூங்காவில் புதிய மலர் நாற்றுகளை நட்டு ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.

வெறிச்சோடியது

4 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் சவாரி செய்ய ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் படகு இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், கொரோனா பரவல் குறைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வரக்கூடிய நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இருந்தாலும் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Next Story