தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி மோகனூர் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி மோகனூர் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
மோகனூர்:
ஒன்றிய அலுவலகம் முற்றுகை
மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சி கீழபாலப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று வேலை வாய்ப்பு திட்டத்தில் கீழபாலப்பட்டி புறக்கணிக்கப்படுவதாக கூறியும், மீண்டும் வேலை வழங்க கோரிக்கை விடுத்தும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மோகனூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
சாலை மறியல்
மோகனூர் ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பொதுமக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் பகுதியில் மட்டும் வேலை வழங்கப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் வேலை வழங்காவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தற்காலிகமாக நிறுத்தம்
பொதுமக்களின் போராட்டம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், தேன்மொழியிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணி தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை மரங்கள் நடுதல் போன்ற விவசாய பணிகளுக்கு அணுகினால் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பணி வழங்கப்படும். மேலும் காவிரி கரையோர காப்புக்காடு பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட வனத்துறையின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story