விழுப்புரத்தில் சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதி தொழிலாளி சாவு
விழுப்புரத்தில் சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை வெள்ளவேடு பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலையை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ஏமப்பேர் புறப்பட்டுள்ளனர். இந்த சரக்கு வாகனத்தை அமாவாசை என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை அருகே வந்தபோது சாலையோரமாக சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அமாவாசை, சிறுநீர் கழிக்க கீழே இறங்கி சென்றார். அந்த சமயத்தில் அதே திசையில் பின்னால் வந்த மினி லாரி ஒன்று, திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் அந்த சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. உடனே மினி லாரியை அதன் டிரைவர் அங்கிருந்து வேகமாக ஓட்டிச்சென்று விட்டார்.
தொழிலாளி சாவு
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த கூலித்தொழிலாளர்களான பூங்காவனம் (வயது 55), அவரது மகள் அம்மு (20), வடிவேல் (45), அவரது மனைவி உமாமகேஸ்வரி (38), பாபு (19), இளவழகி (18), பெரியாயி (55), வாசுகி (30), ஏழுமலை (50) உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வடிவேலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். மற்ற 12 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டுச்சென்ற மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story