கிருஷ்ணகிரியில், பண விவகாரத்தில் மரக்கடை அதிபர் காரில் கடத்தல் சேலம் பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பண விவகாரத்தில் மரக்கடை அதிபரை காரில் கடத்தி சென்ற சேலம் பைனான்சியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
சேலம் சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் அம்பலவாணன் (வயது 45). இவர் சேலத்தில் மர பொருட்கள் வியாபாரம் செய்து தொழில் அதிபராக விளங்கி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர். இவரும், சேலம் கிழக்கு திருவாக்கவுண்டனூர் வசந்த் நகரை சேர்ந்த ஜோசப் என்பவரும் நண்பர்கள் ஆவர்.
இந்தநிலையில் ஜோசப் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.30 லட்சம் கடன் பெற்றார். அந்த பணத்தை கட்ட முடியாததால் வீடு ஏலத்திற்கு வந்தது. இதுகுறித்து ஜோசப் தனது நண்பர் அம்பலவாணனிடம் கூறினார்.
ரூ.30 லட்சம் கடன்
இதையடுத்து அம்பலவாணன் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சரவணன் (40) என்பவரிடம் ரூ.30 லட்சம் தருமாறும், அந்த பணத்தை வட்டியுடன் தந்து விடுவதாகவும் கூறினார். இதை நம்பி சரவணன் பணத்தை கொடுத்தார். அந்த தொகையை வங்கியில் கட்டி ஜோசப்பின் வீட்டு பத்திரத்தை அவர்கள் மீட்டனர்.
இந்த நிலையில், சரவணன் தான் கொடுத்த ரூ.30 லட்சத்தை அம்பலவாணனிடம் கேட்டார். அப்போது பணத்தை தராமல் அம்பலவாணன், ஜோசப் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அம்பலவாணன் மற்றும் சரவணன் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
காரில் கடத்தல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்ப்பதற்காக அம்பலவாணன் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தனது மோட்டார்சைக்கிளில் வந்தார். கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் விளையாட்டு மைதானம் அருகில் அம்பலவாணன் தனது நண்பர்களை சந்தித்து பேசி கொண்டிருந்தார்.
இதுகுறித்து அறிந்த சரவணன் தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கிருஷ்ணகிரிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்த அம்பலவாணனை தாக்கி காரில் கடத்திய அவர்கள் சேலத்திற்கு சென்றனர். இதுகுறித்து அம்பலவாணனின் நண்பர்கள் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
சேலத்தில் மீட்பு
இதையடுத்து கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அம்பலவாணனை கடத்திய அந்த கும்பல் எந்த வழியில் கடத்தி செல்கிறது என கண்காணித்தனர்.
அவர்கள் சென்ற கார் தொப்பூர் சுங்கச்சாவடியை கடந்து சேலம் நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, சேலம் மாநகர போலீசாரின் உதவியுடன் ரெட்டிப்பட்டியில் காரை மறித்து அதில் இருந்த அம்பலவாணனை கிருஷ்ணகிரி போலீசார் மீட்டனர்.
3 பேர் கைது
மேலும் அவரை கடத்திய சேலம் சூரமங்கலம் பைனான்சியர் சரவணன், அவரது கூட்டாளிகள் சந்தோஷ் (24), சரத் என்கிற சாஜன் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் நேற்று கிருஷ்ணகிரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண விவகாரத்தில் மரக்கடை அதிபர் காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story