ஆரோவில் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது


ஆரோவில் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2021 10:42 PM IST (Updated: 26 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பூத்துறை சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த விஜயன் மகன் கிருஷ்ணகுமார் (வயது 24), ரஹ்மதுல்லா மகன் முகமதுரஜீதீன் (20), உருளையன்பேட்டை பாவேந்தர் தெருவை சேர்ந்த கென்னட் மகன் வெற்றி (28) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள சுங்கவரி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வரும் பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த சாந்தப்பன், அவரது நண்பரின் திருமண விழாவில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது அவரை பெரம்பை பகுதியில் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச்சென்றது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 3 பேரும் இதுபோன்று பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Next Story