ஒடுகத்தூர் அருகே ரூ.1 லட்சம் கேட்டு வாலிபரை காரில் கடத்திய 4 பேர் கைது
ஒடுகத்தூர் அருகே ரூ.1 லட்சம்கேட்டு வாலிபரை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே ரூ.1 லட்சம்கேட்டு வாலிபரை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
வாலிபர் கடத்தல்
ஆம்பூர் தாலுகா பணம்காட்டேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகன் திருமலை (வயது 27). இவரும் அணைக்கட்டு தாலுகா ஓங்கப்பாடி கிராமத்தை சேர்ந்த சந்தானம் (27) என்பவரும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் திருமலை, சந்தானம் ஆகிய இருவரும் ஓங்கப்பாடி கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர்களை தாக்கினர். பின்னர் திருமலை மட்டும் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
ரூ.1 லட்சம் கேட்டனர்
இதுகுறித்து சந்தானம் போன் மூலம் மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு திருமலை செல்போனிலிருந்து அவரது நண்பர் கார்த்திக் என்பவருக்கு கும்பல் போன் செய்து திருமலை தங்களிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்காக அவரை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறி, ரூ.1 லட்சத்தை கொடுத்தால் திருமலையை விட்டு விடுவதாகவும் கூறி உள்ளனர்.
இதுகுறித்து சந்தானம், கார்த்தி இருவரும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் அறிவுரையின்படி, கார்த்திக் மர்ம கும்பலிடம் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறினார். உடனே அந்த கும்பல் பணத்தை எடுத்துக்கொண்டு வேலூர் அடுத்த மேல்மொணவூர் சிவன் கோவில் அருகே வரும்படி கூறி உள்ளனர்.
4 பேர் கைது
அதன்படி கார்த்திக் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இரவு 12 மணிக்கு அங்கு சென்றார். மர்ம கும்பலை பிடிக்க போலீசார் மறைந்திருந்தனர். அப்போது திருமலையுடன் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம கும்பல், கார்த்திக் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு, திருமலையை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அவர்களை போலீசார் பின்தொடர்ந்து சென்று காட்பாடியில் வள்ளிமலை கூட்ரோட்டில் 4 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களை வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர்கள் காட்பாடியை அடுத்த உள்ளிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் சீனிவாசன் (24), வன்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சக்தி (19), விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரகதீஷ்குமார் (21), சேனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களுடன் கடத்தலில் ஈடுபட்ட கவுதம், விஸ்வா, தினேஷ், பாலா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார்தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story