சொந்த வீட்டிலேயே ரூ.4 லட்சம் திருடிய வாலிபர் சிக்கினார்
கச்சிராயப்பாளையம் அருகே சொந்த வீட்டிலேயே ரூ.4 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே வெங்கடாம்பேட்டை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சாவித்திரி (வயது 50). இவர்களுக்கு துரைராஜ்(30), ஆனந்தராஜ் (28), சரண்ராஜ் என 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக வீட்டுமனை வாங்குவதற்காக சாவித்திரி தனது வீட்டு பீரோவில் ரூ. 3 லட்சத்து 90 ஆயிரம் வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது கண்டு சாவித்திரி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பீரோவை உடைக்க பயன்படுத்த இரும்பு கம்பி ஒன்றை அந்த வீட்டிலேயே இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணை
இதனால் பணத்தை திருடியது வீட்டில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தினர். இதையடுத்து வீட்டில் உள்ளவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்தராஜ் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் வீட்டில் புதிதாக வாங்க உள்ள வீட்டுமனையை தனது பெயருக்கு வாங்குமாறு ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
அதற்கு அவருடைய பெற்றோர் மறுப்பு தெரிவித்து துரைராஜ் பெயருக்கு வாங்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனால் ஆந்திரமடைந்த ஆனந்தராஜ், இடம் வாங்குவதை தடுக்கும் வகையில், அந்த பணத்தை அவரே திருடியதும், மேலும் பணத்தை மர்மநபர்கள் திருடியது போல் காட்டுவதற்காக மேற்கூரையை உடைத்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மோப்பநாய்
முன்னதாக வீட்டில் பணத்தை திருடிய ஆனந்தராஜ் தனக்கு எதுவும் தெரியாதது போல் விசாரணைக்கு வந்த போலீசாரிடம் சகஜமாக பேசியுள்ளார். அவர்களுடனே சுற்றிவந்துள்ளார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த நாய் ஆனந்தராஜை சுற்றிசுற்றி வந்துள்ளது. இருப்பினும் ஆனந்தராஜ் அதே வீட்டில் வசித்து வருவதால் அவர் மீது, போலீசார் சந்தேப்படவில்லை. இந்த நிலையில் பீரோவை உடைக்கப்பட்ட கம்பி மூலம் ஆனந்தராஜ் போலீசிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story