தொடர் மழை காரணமாக மேலூர்-காரைக்குடி 4 வழிச்சாலை பணி பாதிப்பு


தொடர் மழை காரணமாக மேலூர்-காரைக்குடி 4 வழிச்சாலை பணி பாதிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 11:32 PM IST (Updated: 26 Aug 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக மேலூரில் இருந்து காரைக்குடி வரை நடைபெற்று வந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

தொடர் மழை காரணமாக மேலூரில் இருந்து காரைக்குடி வரை நடைபெற்று வந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

4 வழிச்சாலை பணி

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து காரைக்குடி வரை 46 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.750 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணிக்காக ஏற்கனவே சாலைகளின் இருபுறமும் இருந்து நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் 2 ஆண்டு காலத்திற்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது.
இந்த நான்கு வழிச்சாலை பணியில் மொத்தம் 19 இடங்களில் சுரங்கப்பாதையுடன் கூடிய தரைப்பாலமும், 2 இடங்களில் உயர் மட்ட மேம்பாலமும் கட்டப்பட உள்ளது. மேலும் காரைக்குடி அருகே குன்றக்குடி-தட்டட்டி ரோடு, திருப்பத்தூர்-மானகிரி ரோடு, திருப்பத்தூர்-கண்டரமாணிக்கம் வழியாக இந்த புதிய 4 வழிச்சாலை பணி நடைபெற உள்ளது. இந்த சாலை கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு காரணமாகவும் இந்த பணிகள் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.

மழையால் பணி பாதிப்பு

இதனால் போதிய அளவு தொழிலாளர்கள் இல்லாமல் இந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் பணிகள் தொடங்கியது. அதன் பின்னர் நடப்பாண்டு கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக மீண்டும் இந்த பணி மந்தமாக நடைபெற்று வந்தது. தற்போது சுமார் 10 இடங்கள் வரை பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பாலம் அமைக்கும் இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பணியில் மேலும் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. திருப்பத்தூர் நாச்சியார்புரம் பகுதியில் 4 வழிச்சாலை பணிக்காக அமைக்கப்படும் பாலம் பகுதியிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

பயணதூரம் குறையும்

 இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மேலூர்-காரைக்குடி இடையே நடைபெற்று வரும் இந்த நான்கு வழிச்சாலை பணியானது மொத்தம் 2 ஆண்டுகள் காலத்திற்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக 4 வழிச்சாலை பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த பணிகள் முற்றிலும் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தால் மேலூர்-காரைக்குடி இடையேயான பயணம் தூரம் 14 கிலோ மீட்டர் தூரம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story