பாதியில் நிற்கும் திடக்கழிவு மைய பணியை தொடங்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
வன்னிவேடு பகுதியில் பாதியில் நிற்கும் திடக்கழிவு மையப்பணியை உடனடியாக தொடங்காவிட்டால் ஒப்பந்தம் ரரத்து செய்யப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
வாலாஜா
வன்னிவேடு பகுதியில் பாதியில் நிற்கும் திடக்கழிவு மையப்பணியை உடனடியாக தொடங்காவிட்டால் ஒப்பந்தம் ரரத்து செய்யப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
வாலாஜா தாலுகா, கத்தியவாடி கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் 4 குடும்பத்தினர் வீடு கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அந்த இடத்தினை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசிப்பவர்களை அழைத்து பேசினார். அப்போது அவர்களை அந்த இடத்திலிருந்து மாற்றி, அதே பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கி அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் இலவசமாக வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்து, தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி போன்றவை அமைத்து கொடுக்கப்படும் என்றார்.
மேலும் அதே பகுதியில் வழங்கப்படவுள்ள மாற்று இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பகுதிநேர ரேஷன் கடை
பின்னர் ஆதிதிராவிடர் தெரு பல்நோக்கு கட்டிடத்தில் 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள், கத்தியவாடி ஊரில் உள்ள ரேஷன் கடை தூரமாக உள்ளதால், எங்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. எங்கள் பகுதியிலேயே பகுதி நேர ரேஷன்கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து வன்னிவேடு கிராமத்தில் வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைய உள்ள 3.75 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு தடையின்மை சான்று வழங்கிட இடத்தினை வருவாய் ஆவணங்களை கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இதற்கான பணிகள் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பாதியில் நிற்பதற்கான காரணம் குறித்து நகராட்சி பொறியாளரிடம் கேட்டு அறிந்தார்.
ஒப்பந்தம் ரத்து
அப்போது பொறியாளர், பணி தொடங்கிட கூறி இரண்டு முறை நோட்டீஸ் வழங்கி உள்ளோம் என்றார். அதற்கு கலெக்டர், மூன்றாவது நோட்டீஸ் வழங்குங்கள், பணிகளை தொடங்கவில்லை என்றால் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து ஒருவாரத்திற்குள் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தாசில்தார் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை, நகராட்சி பொறியாளர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story