கருவறையில் சூரியஒளி விழுந்து பொன்னார் மேனியனாக காட்சியளித்த லிங்கம்
காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் கருவறையில் சூரிய ஒளி விழுந்து பொன்னார் மேனியன் போன்று லிங்கம் காட்சியளித்தது.
தா.பழூர்:
லிங்கத்தின் மீது சூரிய ஒளி
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 10-ந் தேதிக்கு பிறகு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் ஆவணி மாதத்தில் 10-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்.
வருடத்தில் இரண்டு முறை தொடர்ந்து 10 நாட்கள் காரைக்குறிச்சி பசுபதீஸ்வரரை, சூரியபகவான் ஒளிக்கதிர்களால் அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அதன்படி நேற்று காலை 6.05 மணிக்கு சூரியன் உதயமானது. அப்போது சூரியனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள லிங்கத்திருமேனி மீது பட்டு, தங்கத்தை உருக்கி வார்த்தது போல் ஒளிர்ந்தது. இதனால் பொன்னார் மேனியனாக சிவலிங்கம் காட்சியளித்தது. இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.
தரிசனம்
இந்த அரிய காட்சியை காண்பதற்காக கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த அரிய நிகழ்வை இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே காண வாய்ப்பு உள்ளது என்று பக்தர்கள் தெரிவித்தனர். அதற்கு பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை மாதத்தில்தான் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் நிகழ்வு நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story