ரசாயனம் தடவிய, கெட்டுப்போன 650 கிலோ மீன்கள் பறிமுதல்


ரசாயனம் தடவிய, கெட்டுப்போன 650 கிலோ மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Aug 2021 1:25 AM IST (Updated: 27 Aug 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ரசாயனம் தடவிய, கெட்டுப்போன 650 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன

திருச்சி
திருச்சி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட உறையூர் காசிவிளங்கி பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சில்லறை மீன் வியாபாரிகள் வருகை தந்து மீன்களை கிலோ கணக்கில் வாங்கி செல்வார்கள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 
இந்தநிலையில் இந்த மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா, உதவி இயக்குனர் ரம்யலெட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை திடீரென சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, 5 மொத்த விற்பனை கடைகளிலும், 9 சில்லறை கடைகளிலும் என 14 கடைகளிலும், 3 கண்டெய்னர் லாரிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயனம் (பார்மலின்) தடவிய 350 கிலோ மீன்களும், கெட்டுப்போன 300 கிலோ மீன்களும் என மொத்தம் 650 கிலோ மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 650 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.


Next Story