ஈத்தாமொழி உயரமானதென்னைக்கு சிறப்பு தபால் உறை


ஈத்தாமொழி உயரமானதென்னைக்கு  சிறப்பு தபால் உறை
x
தினத்தந்தி 27 Aug 2021 2:28 AM IST (Updated: 27 Aug 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

புவிசார் குறியீடு பெற்றுள்ள ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு தபால் உறையை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் வெளியிட்டார்.

நாகர்கோவில்:
புவிசார் குறியீடு பெற்றுள்ள ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு தபால் உறையை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் வெளியிட்டார்.
ஈத்தாமொழி தென்னை
ஈத்தாமொழி உயரமான தென்னை, குமரியின் பாரம்பரிய சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. இதற்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு அங்கீகாரம் குமரிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. இவை பொதுவாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கு கடற்கரை பகுதியில் காணப்படும். குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி மற்றும் குளச்சல் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த பூர்வீக வகை தென்னைமரங்கள் காணப்படுகின்றன.
இந்த வகை மரங்கள் ஈத்தாமொழி உயரமான தென்னை என்ற பொதுவான பெயரால் அறியப்படுகிறது. இந்த மரம் 30 மீட்டர் உயரம் வரை வளர்ந்து, 80 முதல் 100 ஆண்டுகள் வரை விளைச்சல் கொடுக்கும். இது 36 முதல் 40 தென்னை மட்டைகளை கொண்ட கிரீடத்துடன் கூடியது. தேங்காய்கள் வட்டமாக அல்லது நீள்வட்டமாக, இருண்ட அல்லது வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். அவை 11 முதல் 12 மாதங்களில் முதிர்ச்சியடைகின்றன. தேங்காய்களில் உள்ள பருப்பின் அடர்த்தி 1.25 செ.மீ. முதல் 1.50 செ.மீ. வரை தடிமன் கொண்டது. இந்த குறிப்பிட்ட வகை மரம் ஈத்தாமொழி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 80 சதவீத பரப்பளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுகிறது.
சிறப்பு தபால் உறை
ஈத்தாமொழி உயரமான தென்னை சாகுபடி கொப்பரை மற்றும் எண்ணெய்க்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த தென்னை மரங்கள் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை உயர்த்தும் வகையில் விளங்குகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி உயரமான தென்னை வகையின் புவிசார் குறியீடுகளை பதிவு செய்வதன்மூலம், இந்த வகை தென்னையை பாதுகாப்பதாக அமையும்.
இந்தநிலையில் ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழா நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கன்னியாகுமரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், ஈத்தாமொழி உயரமான தென்னைக்கான சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அதை தனியார் நிறுவன உரிமையாளர் இசக்கிமுத்து பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய அதிகாரி சொர்ணம், கோட்ட தபால்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story