நெல்லையில் சினிமா தியேட்டர்கள் திறப்பு


நெல்லையில் சினிமா தியேட்டர்கள் திறப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 2:44 AM IST (Updated: 27 Aug 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டது. ஆனால் புதிய படங்கள் இல்லாததால் நெல்லையில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தியேட்டர்களில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர், சந்திப்பு உடையார்பட்டி ராம், முத்துராம் உள்ளிட்ட தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. அங்கு ஹாலிவுட் திரைப்படமான ‘கான்ஜூரிங்’ திரையிடப்பட்டது. தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களது கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முககவசம் இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. ஆனால் தியேட்டர்களில் மிக குறைவான ரசிகர்களே வந்திருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் இருக்கைகளில் அமர்ந்தனர். 

இதுகுறித்து தியேட்டர் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘தமிழக அரசு உத்தரவுப்படி தியேட்டர்களை திறந்துள்ளோம். தியேட்டர்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது தியேட்டர்களுக்கு வந்து சினிமா பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. 50 சதவீதத்துக்கும் குறைவான ரசிகர்கள் மட்டுமே வருவதால் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றனர்.

Next Story