காங்கிரசார் கற்பழிக்கிறார்கள் என பேட்டி: மந்திரி அரக ஞானேந்திராவின் கருத்துக்கு பசவராஜ் பொம்மை கண்டிப்பு
காங்கிரசார் என்னை கற்பழிக்கிறார்கள் என்று கூறிய மந்திரி அரக ஞானேந்திராவின் கருத்தை ஏற்க முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: காங்கிரசார் என்னை கற்பழிக்கிறார்கள் என்று கூறிய மந்திரி அரக ஞானேந்திராவின் கருத்தை ஏற்க முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மந்திரி அரக ஞானேந்திரா கருத்து
மைசூருவில் கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மாநில அரசை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பலாத்கார சம்பவம் மைசூருவில் நடந்துள்ளது. ஆனால் காங்கிரசார் என்னை குறை சொல்கிறார்கள். இதில் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள். என்னை விமர்சிப்பதன் மூலம் காங்கிரசார் என்னை கற்பழிக்கிறார்கள். இது சரியல்ல" என்றார்.
சர்ச்சைக்குரிய வகையில் இந்த கருத்தை கூறியுள்ள மந்திரி அரக ஞானேந்திராவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியின் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று கர்நாடகத்துக்கு புறப்படும் முன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
5 லட்சம் டோஸ் தடுப்பூசி
டெல்லியில் பல்வேறு மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசினேன். மாநில திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். மத்திய மந்திரிகள் சாதகமான பதிலை கூறியுள்ளனர். குறிப்பாக சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் தினமும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு ஏற்றபடி கர்நாடகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதனால் வருகிற செப்டம்பர் முதல் தினமும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்படும். மைசூரு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்களை விரைவாக கைது செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை அறிக்கை
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, பாதிக்கப்பட்ட மாணவி அந்த நேரத்தில் அங்கு எதற்காக சென்றார் என்றும், காங்கிரசார் தன்னை கற்பழிக்கிறார்கள் என்றும் கூறிய கருத்துகளை நான் ஏற்கமாட்டேன். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை எனக்கு நேரடியாக தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story