சண்டை கலைஞர் மின்சாரம் தாக்கி சாவு; நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை


சண்டை கலைஞர் மின்சாரம் தாக்கி சாவு; நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Aug 2021 3:11 AM IST (Updated: 27 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி சண்டை கலைஞர் பலியான வழக்கு தொடர்பாக நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

ராமநகர்: ராமநகரில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி சண்டை கலைஞர் பலியான வழக்கு தொடர்பாக நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

சண்டை கலைஞர் சாவு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜய் ராவ். இவர், தற்போது ‘லவ் யூ ரச்சு’ என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிதா ராம் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜோகரபாளையா கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.

அப்போது மின்சாரம் தாக்கி சண்டை கலைஞரான விவேக் பலியாகி இருந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் ராமநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகரிடம் போலீஸ் விசாரணை

இந்த நிலையில், சண்டை கலைஞர் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில் நடிகர் அஜய் ராவ் விசாரணைக்கு ஆஜராகும்படி பிடதி போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி, நேற்று காலையில் பிடதி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடிகர் அஜய் ராவ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், ராமநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதாவது படப்பிடிப்பின் போது சண்டை கலைஞரை மின்சாரம் தாக்கியது எப்படி?, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையா?, இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து நடிகர் அஜய் ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். அஜய் ராவும் சம்பவம் குறித்து விளக்கமாக போலீசாரிடம் எடுத்து கூறினார். பின்னர் அவர், போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த வழக்கில் நடிகர் அஜய் ராவ், தயாரிப்பாளர் ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் இவ்வழக்கில் கைதான இயக்குனர் உள்பட 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. 

Next Story