கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 3-ந் தேதி முடிவு
கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 3-ந் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 3-ந் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குழந்தைகளின் கல்வி
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் சாதக-பாதகங்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்படும். மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் தேவிபிரசாத்ஷெட்டி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நாங்கள் கருத்துகளை கேட்டோம். அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பள்ளிகளை திறந்ததால் எந்த தொந்தரவும் இல்லை என்றும், மாணவர்கள் ஆர்வமாக வகுப்புகளுக்கு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பணி இடமாற்றம்
அதனால் கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு ஆர்வமாக உள்ளது. சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை நிபுணர்கள், கொரோனா 3-வது அலையின்போது குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் பள்ளிகளை திறக்க அரசு ஆர்வமாக உள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 3-ந் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
அதற்கு முன்னதாக வருகிற 30-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனுசரித்து பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் பணி இடமாற்ற பணிகள் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. அந்த நேரத்தில் எந்த குழப்பமும் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story