4 மாதங்களுக்கு பிறகு ஏற்காட்டில் பூங்காக்கள் திறப்பு- முட்டல் ஏரியிலும் படகு சவாரி தொடக்கம்


4 மாதங்களுக்கு பிறகு ஏற்காட்டில் பூங்காக்கள் திறப்பு- முட்டல் ஏரியிலும் படகு சவாரி தொடக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2021 11:18 PM GMT (Updated: 2021-08-27T04:48:13+05:30)

4 மாதங்களுக்கு பிறகு ஏற்காட்டில் பூங்காக்கள் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முட்டல் ஏரியிலும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்காடு:
4 மாதங்களுக்கு பிறகு ஏற்காட்டில் பூங்காக்கள் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முட்டல் ஏரியிலும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
படகு இல்லம் திறப்பு
‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக ெகாரோனா ஊரடங்கு காரணமாக ஏற்காட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டு இருந்தன. மேலும் படகு இல்லமும் செயல்படவில்லை. இதன் காரணமாக சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த 23-ந் தேதி ஏற்காட்டில் உள்ள படகு இல்லம் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பூங்காக்கள் திறப்பு
அதே நேரத்தில் பூங்காக்கள் திறப்பு குறித்து மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைக்காததால், அவை திறக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஏற்காட்டில் பூங்காக்களை திறக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முதல் ஏற்காட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டன.
அண்ணா பூங்கா, மான் பூங்கா, ஐந்திணை பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகிய பூங்காக்களில் காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் உற்சாகத்துடன் பூங்காக்களுக்கு சென்று, அதன் அழகை ரசித்தனர். 
மகிழ்ச்சி
எனினும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. 4 மாதங்களுக்கு பின்னர் பூங்காக்கள் திறக்கப்பட்டதால், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறும் போது, பூங்காக்கள் திறக்கப்பட்டதால் ஏற்காட்டில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முட்டல் ஏரி
ஆத்தூர் அருகே கல்லாநத்தத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது முட்டல் ஏரி. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக முட்டல் ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் அங்கு படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் முட்டல் ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதே போல ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

Next Story