ரூ.37 ஆயிரம் மோசடி
ரூ.37 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் வெங்கட்குமார் (வயது38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊர் திரும்பி உள்ளார். இங்கு பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் மீண்டும் வெளிநாடு சென்றுவிடலாம் என்று எண்ணி உள்ளார். இதற்காக இவர் இணையத்தில் வேலை வாய்ப்பு தேடி உள்ளார். அப்போது பிரபல இணைய வியாபார ஆன்லைன் நிறுவனத்தின் செயலியில் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை உள்ளதாக அறிவிப்பினை கண்டுள்ளார். அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டபோது சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் வேலை உள்ளதாகவும் அதுகுறித்த விவரங்களை பெற கட்டணம் செலுத்துவதில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முன்பதிவு செய்த நிலையில் அடுத்தடுத்தகட்ட நிலைகளுக்கு செல்வதற்கும் வேலை ஏற்பாடு செய்வதற்கும் பல்வேறு கட்டங்களில் ஆன்லைன் மூலம் பணம் கேட்டு உள்ளனர். இவ்வாறு வெங்கட்குமார் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் மொத்தம் ரூ.37 ஆயிரத்து 633 செலுத்தி உள்ளார். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட நிலையில் வேலை குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டுகேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லையாம். ஒரு கட்டத்தில் வெங்கட் குமாரின் அழைப்பு எண்ணை தடைசெய்ததுடன் செல் போனை அணைத்துவிட்டாராம். இதுகுறித்து விசாரித்த போது அந்த எண் சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த தினேஷ் என்பவர் என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெங்கட்குமார் ஆன்லைன் மூலம் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story