அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 27 Aug 2021 5:49 PM IST (Updated: 27 Aug 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

சேமன்வயல் கிராமத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தொண்டி, 
திருவாடானை தாலுகா கிராமத்தில் பூர்ண புஷ்கலா சமேத கட்டாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஆலயத்தின் அருகில் அமைக் கப்பட்டு இருந்த யாகசாலையில் திருப்புனல்வாசல் நடராஜ சிவாச்சாரியார் தலைமையில் தீயத்தூர் வட கோட்டை பாலாஜி ஐயங்கார் குழுவினர் 4 கால யாக வேள்விகளை நடத்தினர். அதனைத்தொடர்ந்து நேற்று காலை யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். பூர்ண புஷ்கலா சமேத கட்டாருடைய அய்யனார், விநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கருவறையில் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் போன்ற அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலயத்தை பனஞ்சாயல் ஸ்தபதி முத்துக்குமார் நிர்மானித்து இருந்தார். இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், ஒன்றிய கவுன்சிலர் சாந்தா கணேசன், தேளூர் ஊராட்சி தலைவர் ஐயப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேமன்வயல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story