பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேச்சு
பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்
தூத்துக்குடி:
பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
உடற்பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகரம், ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய உட்கோட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் உட்கோட்ட தலைமையிடம் மற்றும் போலீஸ் நிலையங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் நேற்று கவாத்து மற்றும் உடற்பயிற்சி நேற்று நடந்தது. தூத்துக்குடி நகர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீசாருக்கான பயிற்சி தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடந்தது. பயிற்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
கனிவாக நடந்து...
அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்கள் அனைவரும் நல்லவர்கள். அதில் யாராவது ஒரு சிலர் மட்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள், இவர்களை மனதில் வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது, பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். போலீசார் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து ஒழுக்கமாக இருக்க வேண்டும். சட்டத்தை கடைபிடிப்பதிலும், அரசு விதிமுறைகளை கடைபிடிப்பதிலும் நாம் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாம் பொதுமக்களில் ஒருவராக இருந்து, அவர்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து செயல்படவேண்டும்.
தவறு செய்தால் தண்டனை
பொதுமக்களுக்கு நம்மால் இயன்ற வரையில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு உதவிகள் செய்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். உங்களுக்கு பணியில் உள்ள சிரமங்கள் மற்றும் குறைகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவியுங்கள். அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், அதே சமயம் தவறு செய்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சியில் தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story