குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தகவல்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு பள்ளிகளில் குழு அமைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-
திண்டுக்கல்லை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்கான பிரச்சினைகள் குறித்து 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் குழு
மேலும் இணையதளத்தை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த மாணவர்களை பழக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்களை தடுப்பதற்கு பள்ளிகள் தோறும் குழு அமைக்க இருக்கிறோம். இந்த குழுவில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 20 பேர் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுக்கலாம்.
இதற்கு தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள், சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் விதிமீறல்களை தடுக்க மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்படும். புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் விற்பனை மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எந்த நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தைகளுக்கு மனஅழுத்தம்
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா பேசுகையில், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் பள்ளியில் தான் அதிகம் இருக்கிறார்கள். ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் குழந்தைகள் மனரீதியாக ஒருவித அழுத்தத்தில் இருக்கலாம். எனவே குழந்தைகளிடம் கல்வியை மட்டுமின்றி இதர விஷயங்களையும் ஆசிரியர்கள் பேச வேண்டும். அதன்மூலம் குழந்தைகளின் பிரச்சினைகளை அறிந்து சரிசெய்யலாம்.
இணையதளத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். மேலும் பள்ளிகள், பள்ளிக்கு குழந்தைகள் வரும் சாலைகளில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும் 30 நாட்கள் காட்சிகளை சேமிக்கும் வசதி இருக்க வேண்டும். இதன்மூலம் குற்றங்களை தடுக்கலாம், என்றார்.
இந்த முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் அதிராமசுப்பு, போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் அமுதா, இளஞ்செழியன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story