செல்போன் வெளிச்சத்தில் தடுப்பூசி போட்டதால் பரபரப்பு


செல்போன் வெளிச்சத்தில் தடுப்பூசி போட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 3:48 PM GMT (Updated: 2021-08-27T21:18:35+05:30)

செல்போன் வெளிச்சத்தில் தடுப்பூசி போட்டதால் பரபரப்பு

பொள்ளாச்சி

கோட்டூர் அரசு பள்ளியில் செல்போன் வெளிச்சத்தில் கொரோனா தடுப்பூசி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி சிறப்பு முகாம்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி கள் மூடப்பட்டன. அதன்பிறகு அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப் பட்டன.

 இதையடுத்து கொரோனா 2-வது அலையின் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் வருகிற 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


எனவே ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

இந்த நிலையில் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. 

செல்போன் வெளிச்சம்

இரவு 7 மணிக்கு பிறகும் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி செலுத்தும் வகுப்பறையில் மின் வசதி இல்லை. 

இதனால் பொதுமக்களுக்கு செல்போன் வெளிச்சத்தில் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

வழக்கமாக சிறப்பு முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால் தற்போது மதியத்திற்கு பிறகு தான் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு 400 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தடுப்பூசி தாமதமாக வந்ததால் மாலை 5 மணிக்கு தான் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

மின்சாரம் இல்லை

 இரவு 7 மணிக்கு பிறகு 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் பள்ளியில் தடுப்பூசி போட ஒதுக்கப்பட்ட வகுப்பறையில் மின்சார வசதி செய்து கொடுக்கவில்லை. 

எனவே செவிலியர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பெயர் விவரங்களை பதிவு செய்து, செல்போன் வெளிச்சத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

முகாம் மாலையில் நடைபெறுவது பள்ளி நிர்வாகத்திற்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் முன்கூட்டியே தெரியும். 

ஆனால் அங்கு எந்த வசதியும் ஏற்படுத்த வில்லை. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காக செவிலியர்கள் சிரமப்பட்டு தடுப்பூசி செலுத்தினர். 

எனவே இதுபோன்ற முகாம்கள் நடைபெறும் போது அதிகாரிகள் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story