பனி மூட்டத்தால் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தொய்வு
காட்டு யானைகள் பொன்னூரில் இருந்து முன்டக்குன்னு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது. மழை மற்றும் கடும் பனி மூட்டத்தால் அவற்றை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
கூடலூர்
காட்டு யானைகள் பொன்னூரில் இருந்து முன்டக்குன்னு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது. மழை மற்றும் கடும் பனி மூட்டத்தால் அவற்றை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. .
காட்டு யானைகள்
கூடலூர் தாலுகா நாடுகாணி, தேவாலா பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் வந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து முதுமலையில் உள்ள பொம்மன், சுஜய், சீனிவாசன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு நாடு காணி பொன்னூர் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை களை விரட்டும் பணி தொடங்கப்பட்டது.
கடும் பனிமூட்டம்
அப்போது 15 அடி தூரத்தில் இருக்கும் பொருட்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் புதர்களுக்கு இடையே நிற்கும் காட்டு யானைகளை சரியாக அடையாளம் கண்டு விரட்ட முடியவில்லை.
அத்துடன் காட்டுயானைகள் கும்கி யானைகள் சீனிவாஸ், சுஜய், பொம்மனை விரட்டியது. இதனால் வனத்துறையினரும் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
2-வது நாளாக விரட்டும் பணி
இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து விஜய் என்ற கும்கி யானை கூடுதலாக வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக காட்டு யானைகளை விரட்டும் பணி கும்கி யானைகள் உதவியுடன் தொடங்கப்பட்டது.
அப்போது பொன்னூர் பகுதியில் இருந்த காட்டு யானைகள் இடம் பெயர்ந்து முன்டக்குன்னு வனப்பகுதிக்கு சென்றன. இதைத்தொடர்ந்து வனத்துறையினரும் கும்கி யானைகள் மூலம் விரட்டியவாறு காட்டு யானைகளை பின்தொடர்ந்து சென்றனர்.
ஆனால் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்க முடியவில்லை. மேலும் மழை மற்றும் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது.
கண்காணிப்பு
தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்து இரவு வெளியேறாமல் தடுக்க 25- க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பல குழுக்களாக பிரிந்து பல இடங்களில் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே காட்டு யானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதிகள் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் வனச்சரகர் பிரசாத் உள்ளிட்ட வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
Related Tags :
Next Story