ரேஷன் கடைகளில் அரிசியுடன் ராகி வழங்க முடிவு
ரேஷன் கடைகளில் அரிசியுடன் ராகி வழங்க முடிவு
ஊட்டி
நீலகிரியில் ரேஷன் கடைகளில் அரிசியுடன் ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் தோட்டக்கலை துணை இயக்குனர்கள் ஷிபிலா மேரி, குருமணி மற்றும் இதர துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டனர்.
விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று 52 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது கூறியதாவது:-
பயிர்களுக்கு காப்பீடு
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.
பிரீமிய தொகையாக உருளைக்கிழங்கு (ரூ.4,891, ஒரு ஏக்கர்), வாழை (ரூ.4,347), முட்டைகோஸ் (ரூ.3,893), கேரட் (ரூ.3,631), பூண்டு (ரூ.4,950), இஞ்சி (ரூ.4,532), மரவள்ளி ரூ.1,759 செலுத்த வேண்டும். வருகிற 31-ந் தேதி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும்.
ராகி வழங்கும் திட்டம்
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பேரூராட்சிகளில் கால்நடை கொட்டகை அமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் மானியம் வழங்க கருத்துரு சமர்ப்பிக்குமாறு கால்நடை துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வனவிலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க மானிய விலையில் மின்வேலி அமைக்கும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நடப்பாண்டில் ரேஷன் கடைகள் மூலம் அரிசியுடன் ராகி வழங்கும் திட்டம் நீலகிரியில் செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலைத் துறை மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைத்து ராகி சாகுபடி செய்வதற்கான திட்டத்தை வரையறுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story