அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கலெக்டர் அறிவுரை
அனைத்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை
அனைத்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
வருகிற 1-ந் தேதி முதல் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் செயல்பாட்டுக்கு வருகிறது. இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-
முக கவசம் அணிய வேண்டும்
அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி மையத்தில் நுழையும் போது தங்களது கைகளை சோப்பு கொண்டு 40 நொடிகள் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 1-ந் தேதி முதல் சூடாக சமைத்த மதிய உணவு மட்டும் காலை 11.30 முதல் மதியம் 12.30 வரை அங்கன்வாடி மையத்திலேயே வழங்கப்படும். குழந்தைகளின் பெற்றோர்களோ, பாதுகாவலர்களோ குழந்தைகளை மையத்திற்கு வாரத்தில் 6 நாட்கள் காலை 11.30 முதல் மதியம் 12.30 மணிக்குள் அழைத்து வந்து மதிய உணவினை மையத்திலேயே உட்கொள்ள செய்ய வேண்டும்.
முட்டைகளை பயனாளிகளின் வீட்டிற்கு எடுத்த செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மையத்தினை சுத்தம் செய்யும்போதும், காய்கறிகளை கழுவி நறுக்கும்போதும், சமைக்கும்போதும், பரிமாறும்போதும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி
காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. விரல் நகங்களில் நகப்பூச்சு பயன்படுத்தக் கூடாது. அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையத்தின் அருகில் குப்பைகள், கழிவுநீர் மற்றும் சுற்றித்திரியும் விலங்குகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் அவர்களின் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட வேண்டும். குழந்தைகளை சாப்பிட உட்கார வைக்கும்போது சமூக இடைவெளி தவறாது பின்பற்றிட வேண்டும்.
சளி, இருமல்
குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின்னரே பயன்படுத்த வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர், ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அங்கன்வாடி மையத்திற்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் சமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்திட இவ்விவரத்தினை உயர் அதிகாரிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். குழந்தைகள், பெற்றோர், பாதுகாவலர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மையத்திற்கு வருவதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story