மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் குன்னூர் வருகை


மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் குன்னூர் வருகை
x
தினத்தந்தி 27 Aug 2021 10:15 PM IST (Updated: 27 Aug 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் சனிக்கிழமை குன்னூர் வருகிறார். அங்கு வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் அவர் உரையாற்றுகிறார்.

குன்னூர்

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் சனிக்கிழமை குன்னூர் வருகிறார். அங்கு வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் அவர் உரையாற்றுகிறார். 

ராணுவ பயிற்சி கல்லூரி 

குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் எம்.ஆர்.சி. ராணுவ மையம், ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ பயிற்சி கல்லூரி ஆகியவை உள்ளன.  

ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி நமது நாட்டின் தோழமை நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

மத்திய மந்திரி வருகை 

இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  சனிக்கிழமை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் கோவை வருகிறார். 

 பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஜிம்கானா கிளப் ஹெலிகாப்டர் மைதானத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் ராணுவ கல்லூரிக்கு அழைத்து செல்லப் படுகிறார். அங்கு ஒரு நாள் அவர் தங்குகிறார்.

பலத்த பாதுகாப்பு 

பின்னர் ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் இந்திய மற்றும் வெளிநாட்டு முப்படை அதிகாரிகளுடன் அவர் உரையாடுகிறார். 

தொடர்ந்து மதியம் ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்படுகிறார். 

மத்திய மந்திரியுடன்  ராணுவ உயர் அதிகாரிகளும் குன்னூருக்கு வருகிறார்கள். இதன் காரணமாக குன்னூர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

500 போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.


Next Story