போடியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
போடியில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். . போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தேனி:
போடியில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். . போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 53). இவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முருகவேல் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் கருப்பு பூஞ்சை பாதிப்பு தீவிரமாக இருந்ததால் அவரது வலது கண் பார்வை பறிபோனது. மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் அடக்கம்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகவேல் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் இருந்தபடியே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் மேலச்சொக்கநாதபுரம் மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது போலீசார் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த முருகவேலுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ராஜேஸ்வரி நிர்மலா என்ற மகளும், கலைச்செல்வன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story