வேலூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
வேலூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கி உள்ளது.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கி உள்ளது.
கொரோனா தடுப்பூசி
வேலூர் மாநகராட்சி பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில் கணக்கெடுப்பு பணி மாநகராட்சி சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் கடைகள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை சேகரித்தனர். தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தினர்.
அபராதம்
அதன்படி வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ள நேதாஜி மார்க்கெட், மெயின் பஜார், சுண்ணாம்புக்காரதெரு, காந்திரோடு, ஆற்காடு ரோடு போன்ற பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் குறித்து கணக்கெடுத்தனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். தடுப்பூசி போடாமல் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தடுப்பூசி போடாமல் இருந்தால் கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் மணிவண்ணன் கூறுகையில், வேலூர் மாநகர பகுதியில் உள்ள காட்பாடி, சத்துவாச்சாரி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்களில் உரிமையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி போடுவதை தவிர்த்து வரும் வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story