விழுப்புரம் மாவட்டத்தில் 2 சினிமா தியேட்டர்கள் மட்டுமே திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 2 சினிமா தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. இவற்றில் குறைந்த அளவிலான ரசிகர்கள் படம் பார்த்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 50 சதவீத ரசிகர்களுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வளவனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி அனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 சினிமா தியேட்டர்களும் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தன.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 2 சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதுவும் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள ஒரு தியேட்டரும், நேருஜி சாலையில் உள்ள ஒரு தியேட்டரும் மட்டுமே திறக்கப்பட்டன. அந்த தியேட்டர்களில் காலை 11 மணி, மதியம் 2.15 மணி, மாலை 6.15 மணி என 3 காட்சிகளாக தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கான்ஜூரிங் என்ற ஆங்கில திரைப்படம் வெளியிடப்பட்டது. அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளுடனும், 50 சதவீத இருக்கைகளுடனும் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோதிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்த அளவே ரசிகர்கள் வந்திருந்து படம் பார்த்தனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்ததால் சினிமா தியேட்டர்கள், ரசிகர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதுபற்றி தியேட்டர் மேலாளர் ஒருவர் கூறுகையில், வருகிற 3-ந் தேதி முதல் சில புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அந்த சமயத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் திறக்கப்படும், ரசிகர்கள் கூட்டமும் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
Related Tags :
Next Story