பகலில் வெயில்; மாலையில் கொட்டிய மழை


பகலில் வெயில்; மாலையில் கொட்டிய மழை
x
தினத்தந்தி 27 Aug 2021 5:03 PM GMT (Updated: 27 Aug 2021 5:03 PM GMT)

கடலூரில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் மழை கொட்டியது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

நேற்று முன்தினம் இரவு கடலூர்  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரை பொறுத்தவரை இடி, மின்னல்கள் மிரட்டிய போதிலும், சாரல் மழையாகவே பெய்தது.  ஆனால் வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி உள்ளிட்ட ஏனைய இடங்களில் கனமழை பெய்தது.

கொட்டித் தீர்த்த மழை

இந்த நிலையில் நேற்று காலை முதல் கடலூரில் வறண்ட வானிலையே நிலவியது. பகல் முழுவதும் சூரியனின் ஆதிக்கமே இருந்தது. இதனால் கடலூர் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கருவாடு உள்ளிட்டவைகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், மாலை 4 மணி அளவில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கடலூர் நகரமே இருள் சூழ்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. 

இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதுதவிர சிதம்பரம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, அண்ணாமலை நகர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 45 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக கடலூரில் 0.4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 


Related Tags :
Next Story