வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா  பேராலய ஆண்டு பெருவிழா
x
தினத்தந்தி 27 Aug 2021 10:35 PM IST (Updated: 27 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி நடக்கிறது.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி நடக்கிறது.
வேளாங்கண்ணி மாதா பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. 
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7-ந் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நாளை கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான பெருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடு்த்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் இன்றி நாளை கொடியேற்றம் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. 
கடைகள் மூடப்பட்டன
மேலும் அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை இணையதளம், தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவுபடியும், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படியும், வேளாங்கண்ணி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படியும் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, உத்திரியமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவர்த்தி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.
19 இடங்களில் தடுப்புகள்
மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மின்னொளியில் ஜொலிக்கிறது
ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் மின்விளக்குகளால் கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Next Story