விமான நிலையத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.15¾ லட்சம் மோசடி
ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டெல்லியில் ‘கால் சென்டர்' நடத்தி பலரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
தேனி:
ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டெல்லியில் ‘கால் சென்டர்' நடத்தி பலரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
பட்டதாரி பெண்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிப்புத்தூரை சேர்ந்த மலைச்சாமி மனைவி சாரதா (வயது 35). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 'வேலை வேண்டுமா? இந்த எண்ணுக்கு உங்கள் விவரங்களை அனுப்புங்கள்' என்று குறிப்பிட்டு ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த செல்போன் எண்ணை சாரதா தொடர்பு கொண்டார். அப்போது அசோக் என்ற பெயரில் ஒருவர் பேசினார். அவர் டெல்லி விமான நிலையத்தில் வேலை பார்ப்பதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும் அவர் சாரதாவை விமான நிலையத்தில் வேலைக்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறி அதற்கு முன் கட்டணமாக ரூ.2,250 செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அதை நம்பிய சாரதாவும் அவர் கூறிய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தினார்.
ரூ.15 லட்சம் மோசடி
பின்னர் விநாயகமூர்த்தி, அக்பர், ராஜாராம் என்ற பெயரில் மேலும் 3 நபர்கள் அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். பயிற்சி கட்டணம், தொழில்நுட்ப பொருட்கள் கட்டணம், தொழில்நுட்ப பொருட்களை அனுப்பி வைக்கும் செலவு, வங்கிக்கணக்கு தொடங்குதல், குடும்ப காப்பீட்டு கட்டணம், பயிற்சியின் போது தங்குமிடம் கட்டணம், பாஸ்போர்ட் எடுக்கும் செலவு, அதிகாரிகளுக்கான கமிஷன், மருத்துவ பரிசோதனை மற்றும் இ-பாஸ் கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி அடுத்தடுத்து பணம் கேட்டனர்.
சாரதாவும் தனக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் பல தவணையாக பணம் செலுத்தினார். அந்த வகையில் அவர் மொத்தம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425 அனுப்பி இருந்தார். இறுதியில் அவர்கள் ஒரு பணி உத்தரவு ஆணையை அனுப்பி வைத்தனர். அதை சாரதா பரிசோதித்த போது, போலியானது என்பது தெரியவந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அசோக், விநாயகமூர்த்தி, அக்பர், ராஜாராம் ஆகிய 4 பேர் மீது கடந்த ஜூன் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
3 பேர் சிக்கினர்
மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்பார்வையில், போடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 11 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் டெல்லிக்கு சென்று விசாரணை நடத்தினர். மோசடி செய்த நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கிக்கணக்கு எண்கள் ஆகிAயவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவை ஒவ்வொன்றும் போலியான முகவரியில் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கிக்கணக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் கோவிந்த் (21) என்பவருடையது என்பதும், அவர் டெல்லியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவிந்த் இருக்கும் இடத்துக்கு தனிப்படையினர் சென்று, அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர், டெல்லி சஹர்பூர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் விஜய் (29), மணியன் மகன் ராம்சந்திரன் (33) ஆகியோர் 'கால் சென்டர்' நடத்தி இதுபோன்ற மோசடிகள் செய்து வருவதாகவும், அவர்களின் கால் சென்டர் அலுவலகம் டெல்லி நேதாஜி சுபாஷ் பிலேஷ் என்ற இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பேரில், கால்சென்டர் நடந்த இடத்துக்கு தனிப்படையினர் சென்றனர்.
அங்கு ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் போலி அரசு முத்திரையுடன் கூடிய ஆவணங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விஜய், ராம்சந்திரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகள்
விசாரணையில் அவர்கள் இருவரும் தான் அசோக், விநாயகமூர்த்தி, அக்பர், ராஜாராம் என்ற போலியான பெயர்களில் சாரதாவை தொடர்பு கொண்டு பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் விஜய், ராம்சந்திரன், கோவிந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நேற்று தேனிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், 31 செல்போன்கள், 3 லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், 46 ஏ.டி.எம். கார்டுகள், பல்வேறு சிம்கார்டுகள், போலியான ஆவணங்கள், போலியான வங்கி காசோலைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இவர்கள் இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான விஜய், ராம்சந்திரன் ஆகியோரின் பூர்வீகம் நாமக்கல் மாவட்டம் ஆகும். அவர்களது குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக டெல்லியில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story