கழிவுநீரை ஆற்றில் விடுவதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


கழிவுநீரை ஆற்றில் விடுவதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Aug 2021 11:10 PM IST (Updated: 27 Aug 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் அனேரி கிராமத்துக்கு செல்லும் வழியில் தனியார் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அங்குள்ள பாம்பாற்றில் விடுவதாக தெரிகிறது. இதனால் பாம்பாற்றில் உள்ள தண்ணீர் மாசு படிந்து, நச்சு தன்மையாக மாறுவதாக கூறப்படுகிறது. ஆற்றில் உள்ள மீன்கள், உயிரினங்கள் இறந்து விடுகின்றன. பாம்பாற்றில் கலக்கப்படும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. 

எனவே சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாம்பாற்றில் விடுவதை தடுக்கக்கோரி ராசமங்கலம், அனேரி, புலிக்குட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அனேரி கூட்ரோடு அருகில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீரென தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

Next Story