திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
ஆவணி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் கோவில் கிரிபிரகாரத்தில் கொடிப்பட்டம் வலம் வந்து மீண்டும் கோவிலுக்குள் சென்றது. தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொடியேற்றம்
அதிகாலை 5.40 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய ஆனந்த விசுவநாத பட்டர் ஆவணி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், மஞ்சள், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும், பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு சோடஷ தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவிலில் நேற்று முதல் வருகிற 5-ந்தேதி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் ஆவணி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கோவிலுக்கு பக்தர்கள் செல்லாத வகையில், அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின.
சுவாமி-அம்பாள் எழுந்தருளல்
தொடர்ந்து விழா நடைபெறும் நாட்களில் தினமும் சுவாமி- வள்ளி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story