வேன் மோதி மூதாட்டி பலி
களக்காடு அருகே வேன் மோதி மூதாட்டி பலியானார்.
களக்காடு:
களக்காடு அருகே சிங்கிகுளம் மாடன் தம்புரான் கோவில் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 70). இவரது கணவர் ஆறுமுகம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் பலவேசம் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று பலவேசம் சிங்கிகுளம் நடுத்தெருவில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி வந்த வேன் பலவேசம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பலவேசத்தை உறவினர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் சுடலை களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பலவேசம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வேனை ஓட்டி வந்தது இளையாமுத்தூரை சேர்ந்த தளவாய் மகன் செல்லத்துரை என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story