பள்ளி ஆசிரியர்கள்- கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி
பள்ளி ஆசிரியர்கள்- கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
பெரம்பலூர்:
தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழுவீச்சில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களில் 266 பேர் இன்னும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி கூட போடாமல் இருந்தனர். அவர்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், குன்னம், பாடாலூர், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முகாமில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 51 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கல்லூரி மாணவ-மாணவிகள் பலரும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் முகாமிற்கு ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர். மாவட்டத்தில் நேற்று மட்டும் மொத்தம் 2,528 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story