பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைவரும் பேச வேண்டும்; நடிகை ரம்யா கருத்து


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைவரும் பேச வேண்டும்; நடிகை ரம்யா கருத்து
x
தினத்தந்தி 27 Aug 2021 8:39 PM GMT (Updated: 2021-08-28T02:09:49+05:30)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைவரும் பேச வேண்டும் என்று நடிகை ரம்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு: மைசூருவில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, இரவு 7.30 மணிக்கு சாமுண்டி மலை பகுதியில் பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்திற்கு அந்த பெண் அங்கு சென்றிருக்க கூடாது என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை ரம்யா தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இது உங்களது தவறு. நீங்கள் அவ்வாறு பேசியிருக்க கூடாது. நீங்கள் அவ்வாறு செய்திருக்க கூடாது. நீங்கள் அந்த உடையை அணிந்திருக்க கூடாது. இரவு நேரத்தில் வெளியே போய் இருக்க கூடாது. மேக்கப் போட்டிருக்க கூடாது. உதட்டு சாயம் போட்டியிருக்க கூடாது. இப்படி நீங்கள் அது செய்திருக்க கூடாது, இது செய்திருக்க கூடாது என்று சொல்கிறார்கள். நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டும். நாம் மாற வேண்டும். இவ்வாறு முட்டாள்தனமாக பேசுபவர்கள் அதை நிறுத்த வேண்டும். இது இன்றுடன் முடியட்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டு கண்களை மூடி கொண்டிருக்க வேண்டாம். அதற்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்.
இவ்வாறு ரம்யா குறிப்பிட்டுள்ளார்.

Next Story