கடந்த 2½ ஆண்டுகளில் கர்நாடகத்தில் 1,168 கற்பழிப்பு வழக்குகள் பதிவு
கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் 1,168 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் 1,168 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளது.
1,168 கற்பழிப்பு வழக்குகள்
மைசூருவில் கல்லூரி மாணவியை மர்மநபர்கள் கூட்டாக கற்பழித்திருந்தனர். இந்த சம்பவம் மைசூரு மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியை கற்பழித்தவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம், இளம்பெண்கள், பெண்கள் கற்பழிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. அதாவது கர்நாடகத்தில் தினமும் ஒரு பெண் கற்பழிக்கப்படுவதும் தெரியவந்திருக்கிறது.
அதன்படி, கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கடந்த மே மாதம் வரை மாநிலம் முழுவதும் பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு என ஒட்டு மொத்தமாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் 1,168 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சராசரியாக தினமும் ஒரு கற்பழிப்பு வழக்கு மாநிலத்தின் ஏதாவது போலீஸ் நிலையத்தில் பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.
18 பெண்கள் கொலை
இவற்றில் 22 பெண்கள் மர்மநபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக வழக்குகளும் பதிவாகி உள்ளன. அத்துடன் 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களை கொலை செய்திருப்பதாகவும் வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
சிறுமிகள், இளம்பெண்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான பயங்கர குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக மகளிர் அமைப்பினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை...
இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் மாநிலத்தில் அதிகரித்து விட்டது தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு பெண்கள் மீது தாக்குதல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்ததாக 10 ஆயிரத்து 227 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2020-ம் ஆண்டில் 10 ஆயிரத்து 761 வழக்குகளும், இந்த ஆண்டு (2021) மே மாதம் வரை 4,401 வழக்குகளும் பதிவாகி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
கொரோனா ஊரடங்கு காலத்தில் திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் மாநிலத்தில் குறைவாக நடந்திருந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடந்து வருவது ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story