கர்நாடகத்தில் தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது


கர்நாடகத்தில் தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 28 Aug 2021 2:10 AM IST (Updated: 28 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 3 நாட்கள் நடைபெறும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவு தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் தேர்வு எழுத தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் 3 நாட்கள் நடைபெறும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவு தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் தேர்வு எழுத தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுழைவு தேர்வு

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வில் 2 லட்சத்து ஆயிரத்து 816 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். இதில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு எழுத தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 530 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு பணியில் 20 ஆயிரத்து 415 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். 28-ந் தேதி உயிரியல் மற்றும் கணித தேர்வும், 29-ந் தேதி இயற்பியல், வேதியியல் தேர்வும் நடக்கிறது. வெளிமாநில மற்றும் எல்லை பகுதியில் உள்ள மாணவர்களுக்காக 30-ந் தேதி கன்னட மொழி தேர்வு நடைபெறும்.

சுகாதார பணியாளர்கள்

இந்த ஆண்டு தொழிற்கல்வி படிப்புகளுக்கு பி.யூ.சி.2-ம் ஆண்டு தேர்வு கணக்கில் கொள்ளப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நுழைவு தேர்வு மாணவர்களுக்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு மையங்களில் துணை சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதித்த பிறகே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை உயிரியலும், மதியம் 2.30 முதல் 3.50 மணி வரை கணிதமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை இயற்பியலும், மதியம் வேதியியல் தேர்வும் நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கன்னட தேர்வு காலை 11.30 மணிக்கு தொடங்கி 12.50 மணி வரை நடக்கிறது. கேள்வித்தாளில் கேள்வி-பதில்கள் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகள்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கைக்கடிகாரம் பயன்படுத்த அனுமதி இல்லை. செல்போன், கையடக்க கணினி, கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோய் அறிகுறி உள்ளவர்கள் தேர்வு எழுத தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story