கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி  முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2021 2:14 PM IST (Updated: 28 Aug 2021 2:14 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 10 ஆயிரம் பேருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 10 ஆயிரம் பேருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி முகாம் 
கிருஷ்ணகிரியில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி பகுதியில் பணிபுரியும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஓலா மின்சார இருசக்கர வாகன நிறுவனம், கிருஷ்ணகிரி இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நடந்த இந்த கொரோனா தடுப்பூசி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கடந்த 5-ந் தேதி சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி ஊராட்சியில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் சுமார் 17,500 தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை 
தொடர்ந்து, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட 10 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை 5 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள், தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது ஆதார் அடையாள அட்டையை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். 
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story