உடுமலையில் சிறப்பு பயிற்சி முகாம்


உடுமலையில் சிறப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 28 Aug 2021 6:16 PM IST (Updated: 28 Aug 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

பொது வினியோகத்திட்டப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த ரேஷன்கடை பணியாளர்களுக்கு உடுமலையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

உடுமலை
பொது வினியோகத்திட்டப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த ரேஷன்கடை பணியாளர்களுக்கு உடுமலையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ரேஷன் கடைகள்
அரசின்பொது வினியோகத்திட்டத்தில் ரேஷன் கடைகள்  செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ரேஷன்கடைகளுக்கு சென்று வருகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் சர்வர் வேலை செய்யாத நேரங்களில், ரேஷன் அட்டைதாரரின் கைவிரல் ரேகை பதிவாகாமல்போகும். சில நேரங்களில் கைரேகையை பதிவு செய்வதற்கு ரேஷன்கடையில் விற்பனையாளர் மீண்டும், மீண்டும் முயற்சிக்கவும் செய்வதுண்டு. அதுபோன்ற நேரங்களில் ரேஷன்கடைபணியாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ரேஷன்கடை பணியாளர்கள், ரேஷன்கடைகளுக்கு வரும் பலதரப்பட்ட பொதுமக்கள் பொறுமையாகவும், தன்மையாகவும் கையாள வேண்டியுள்ளது.
புத்தாக்க பயிற்சி முகாம்
இந்த நிலையில் பொதுவினியோகத்திட்டப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த ரேஷன்கடை பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்  திருப்பூர் மண்டல தமிழ் நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உடுமலையில், திருப்பூர் சாலையில் உள்ள உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க குடோன் வளாகத்தில் நேற்று  நடந்தது.
முகாமிற்கு மடத்துக்குளம் வட்டார கூட்டுறவு சார்பதிவாளரான உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் ப.தமிழரசு தலைமை தாங்கி பேசினார். உடுமலை வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் பி.மாரிமுத்து, சார்பதிவாளரான உடுமலை வட்டார கள அலுவலர் எ.அப்துல்கப்பார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மேலும் பால் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் த.உதயகுமார், உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் பி.ரவி, வட்டப்பொறியாளர் கே.விக்னேஷ்பாரதி ஆகியோர் பேசினர்.
அறிவுரைகள்
முகாமில் பேசியவர்கள் ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரித்தல், விற்பனை முனைய கருவி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டியவை, விற்பனை முனைய கருவிகளை மின்னூட்டம் செய்தல் மற்றும் பாதுகாத்தல், கடைகளில் கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய அறிவிப்பு பலகைகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்தல், கிடங்குகளிலிருந்து முதலில் பெறப்படும் அத்தியாவசிய பொருட்களை முதலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகித்தல், குடும்ப அட்டைதாரர்களிடம் பொறுமையாகவும், தன்மையாகவும் நடந்து கொள்ளுதல், அவ்வாறு நடந்து கொள்வதற்கான அடிப்படை பண்புகள், ரேஷன்கடையின் விற்பனையாளர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள், கடையின் பணியாளர் அறிய வேண்டியவை, அரசு, பதிவாளர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஆகியோரது அறிவுரைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினர்.மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பாக கே.சித்ரா, எஸ்.கருப்புசாமி ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்த பயிற்சி முகாமில் உடுமலைநகரம் உள்ளிட்ட உடுமலைவட்டாரம், மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய வட்டாரங்களில் உள்ள ரேஷன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குறுகியகாலப்பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.
------------


ரேஷன் கடைப்பணியாளர்களுக்கு நடந்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தபோது எடுத்தபடம்.
-----------


Next Story