கோர்ட்டில் ஆஜராக வந்தவர்களை கத்தியால் குத்திய 10 பேர் கைது
கோர்ட்டில் ஆஜராக வந்தவர்களை கத்தியால் குத்திய 10 பேர் கைது
கோவை
கோவை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்தவர்களை கத்தியால் குத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கபடி போட்டி
கோவை புலியகுளம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழா கபடி போட்டியில் வெளியூர்களை சேர்ந்த வீரர்கள் சிலர் விளை யாடினர் இது தொடர்பாக நவீன்குமார் (வயது 30) என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் நவீன்குமார் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக வடவள்ளியை சேர்ந்த விஜயகுமார் (23), ஹரிஹரன் (21), கண்ணன் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணை கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள குண்டுவெடிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக நேற்று முன்தினம் விஜய குமார், ஹரிஹரன், கண்ணன் ஆகிய 3 பேரும் கோர்ட்டிற்கு வந்தனர்.
தனிப்படை அமைப்பு
அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே ரோட்டிற்கு வந்தனர். அப்போது கோர்ட்டிற்கு வெளியே நின்ற ஒரு கும்பல், அவர்கள் 3 பேரையும் துரத்தி சென்று கத்தியால் குத்தினர்.
இதில் படுகாயமடைந்த ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் அர்ஜூன்குமார், விக்னேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்ட நவீன்குமாரின் நண்பர்கள் கத்திக்குத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
அதன்படி, நவீன்குமாரின் தந்தை கருப்பசாமி(வயது48) ஆட்டோ டிரைவர். அண்ணன் பிரவீன்குமார்(29), சங்கர்(23), அஜய்குமார்(20), காமேஷ்(21), பார்த்திபன்(22), சதீஸ்(19), சிபா என்கிற சங்கர்(20), கபீஸ் என்ற கபீஸ் குமார்(20), ராஜ்குமார்(24) ஆகிய 10 பேரும் சேர்ந்து ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது.
இதைய டுத்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story