7 கார்களில் கொண்டு வந்த 415 கிலோ வெள்ளிக்கொலுசுகள் பிடிபட்டன வரி கட்டாததால் ரூ.17 லட்சம் அபராதம் விதிப்பு
கொடைரோட்டில் 7 கார்களில் கொண்டு வரப்பட்ட 415 கிலோ வெள்ளிக்கொலுசுகள் பிடிபட்டன. இவற்றுக்கு வரி கட்டாததால் ரூ.17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைரோடு:
சேலத்தில் இருந்து மதுரைக்கு கார்களில் நகைகள் கடத்தப்படுவதாக வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை வணிகவரித்துறை அதிகாரிகள் பாலமுருகன், பசல் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே நேற்று காலை 8 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அடுத்தடுத்து 7 கார்கள் வரிசையாக வந்தன. அந்த கார்களை வணிகவரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் ஒவ்வொரு காரிலும் டிக்கியை திறந்து பார்த்தனர். அப்போது 7 கார்களின் டிக்கிகளிலும் துணிப்பைகள் இருந்தன. அந்த துணிப்பைக்குள் சிறு சிறு கட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது புதிய வெள்ளிக்கொலுசுகள் இருந்தன. அதன்படி 7 கார்களில் இருந்தும்் 415 கிலோ வெள்ளிக்கொலுசுகள் பிடிபட்டன. இந்த கொலுசுகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது, வெள்ளிக்கொலுசுகளுக்கு முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்று கார்களில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
ரூ.17 லட்சம் அபராதம்
விசாரணையில் காரில் வந்தவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளிக்கொலுசு வியாபாரிகளான செந்தில்பூபதி(வயது 40), வெங்கடேசன்(52), ஆனந்த அய்யர்(70), பாரதிராஜா (60), ஜீவானந்தம் (54), சரவணன் (36), பாலாஜி (46) ஆகியோர் என்பதும், முறையாக வரி செலுத்தாமல் வெள்ளிக்கொலுசுகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் மதுரையில் உள்ள பிரபலமான நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பேரில் சப்ளை செய்வதற்காக வெள்ளிக்கொலுசுகளை கொண்டு வந்து உள்ளனர். இதையடுத்து வரிசெலுத்தாமல் கொண்டு வந்த 415 கிலோ வெள்ளிக்கொலுசுகளுக்கும் ரூ.16 லட்சத்து 93 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் காரில் வந்தவர்களிடம் அபராதம் செலுத்துவதற்கான அவ்வளவு தொகை இல்லை. எனவே அவர்கள் இது குறித்து மதுரையில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொடைரோடுக்கு விரைந்து வந்து அபராத தொகையை கட்டினர்.
பின்னர் வெள்ளிக்கொலுசுகள் காரில் வந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் அவர்கள் வெள்ளிக்கொலுசுகளுடன் கார்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையின்போது அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார், ஆயுதப்படை போலீசார் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story