தேனி அருகே தென்னை நார் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
தேனி அருகே தென்னை நார் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.
உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை லாரியில் தென்னை நார்களை ஏற்றிக்கொண்டு கம்பத்தில் இருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5 மணி அளவில் தேனியை அடுத்த கோட்டூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அந்த லாரி வந்தபோது, பின்பகுதியில் தென்னை நாரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது பின்னால் மற்றொரு லாரியில் வந்த டிரைவர், தென்னை நாரில் தீப்பற்றி எரிவது குறித்து முருகேசனிடம் தெரிவித்தார்.
உடனே அவர் லாரியை நிறுத்திவிட்டு, தென்னை நாரில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் லாரி முழுவதும் தீ பரவியது. இதில் லாரியில் ஏற்றி வந்த தென்னை நார் முழுவதும் தீயில் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கும், சின்னமனூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார், லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீவிபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த தீவிபத்தால் கம்பம்-தேனி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக தென்னை நார்களை லாரியில் ஏற்றி சென்றதால், சாலையோர மின்சார கம்பியில் உரசி தீப்பிடித்து இருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story